ச் ஈகரை சித்த மருத்துவம்

ரோஜாவின் மருத்துவ குணம்

பிறந்தகம் அந்நிய பூமியாக இருந்தாலும், நீண்ட காலத்திற்கு முன்பே நம் மண்ணைப் புகுந்த இடமாகக் கொண்டு அங்கிங்கெனாத படி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மலர்களின் ராஜாவான ரோஜா மலரின் மருத்துவக் குணம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

இதனை சம எடையாக சீனக் கற்கண்டுடன் தேன் சேர்த்து அன்றாடச் சூரிய வெயிலில் வைத்து எடுத்துக் கொண்டு காலை,மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். இதனால் உடலுக்கு உற்சாகத்தையும், மனதுக்கு உல்லாசத்தையும் சிறப்பாகத்தந்து மகிழ்விக்கும்.

குழந்தைகளின் சீதபேதிக்கு இதனிடம் இருக்கும் துவர்ப்புச்சத்து மருந்தாகி குணமாக்குகிறது. அஜீரணமா? வயிற்று வலியா? வேக்காளமா? அனைத்தும் இதனைத் தொகையலாக்கி உண்டாலே பறந்தோடும் என்பதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு நிச்சயம் தெரியும்.

மலம் இறுகிய குழந்தைகட்கு இது சிறிது மலமிளக்கியாகவும் வேலை செய்கிறது.

அன்பிற்குரியோருக்கு தந்தது ஆரத் தழுவ வைக்கும் இந்த ரோஜாவிலிருந்துதான் பன்னீர் தயாரித்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மணக்க வைக்கிறது. பூவையர்க்கு ஏற்படும் கருப்பை தொடர்பான வியாதிகளுக்கு நன்கு வேலை செய்து அவர்களைப் புன்னகை பூக்க வைகப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது ரோஜா.



Tamil - Thuthi

English - Country mallow

Telugu - Tutri-chettu

Malayalam - Pettaka

Sanskrit - Atibala

Botanical Name - Abutilon indicum

ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள் வீங்கிப்பருத்து வெளிவரு வதைத்தான் மூலநோய் என்கிறார்கள்.

மூலதாரம் சூடு ஏறி மலபந்தமாகும்போது, மலம் வெளியேறாமல் உள்ளுக் குள்ளேயே நின்று இறுக்குகிறது. முக்கி வெளியேற்ற முற்படும்போது மலவாய்க் குடலில் இருந்து சிரைகள் பாதிக்கப்பட்டு வெளியே தள்ளிக்கொண்டு வந்து விடுகின்றன.

தவிர, காய்ந்த மலம் ஆசனவாயைக் கிழிப்பதால் ரத்தம் பீறிட்டு வெளியே வரும். ஒவ்வொரு நாளும் இதே மாதிரி மலம் கழிக்கும்போது அந்த வாய்ப் பிளந்து கொள்ளும். இதை பிஸ்ஸர் அல்லது ஆசனவாய் வெடிப்பு என்கிறார்கள்.

இது புண்ணாகி நாளடைவில் சீழ் மூலம் அல்லது பவுத்திரமாக மாறும். இவ்வாறே நவ மூலங்கள் உண்டாகின்றன.

ஆங்கில வைத்தியத்தில் இதை முதல் டிகிரி, இரண்டாவது டிகிரி, மூன்றாவது மற்றும் நான்காவது டிகிரி என நான்கு வகைகளாகப் பிரிப்பார்கள். ஆனால் நமது தமிழ் முன்னோர்கள் இதை இருபத்தோரு வகைகளாகப் பிரித்தார்கள்.

அவை:

நீர் மூலம், செண்டு மூலம், முளை மூலம், சிற்று மூலம், வரண் மூலம், ரத்த மூலம், வினைமூலம், மேக மூலம், பௌத்திர மூலம், கிரந்திமூலம், சூத மூலம், புற மூலம், சீழ் மூலம், ஆழி மூலம், தமரக மூலம், வாத மூலம், பித்த மூலம், சிலேத்தும மூலம், தொந்த மூலம் மற்றும் கவ்வு மூலம்.

இதில் ஒன்பது வகைகள் மிகக் கடுமையானவை என்பதால் இவற்றை நவமூலம் என்றும் சொன்னார்கள்.

நமது மூதாதையரான சித்தர்கள் மூல நோயை குணப்படுத்தும் பல அரிய மூலிகைகளை ஓலைச் சுவடிகளில் விட்டுச் சென்றுள்ளார்கள்.

அதனடிப்படையில் மூலநோய்க்கு பிரத்யேகமான மூலிகை மருந்துகள் தயாரிக்கப்பட்டு அளிக்கும்போது பக்க விளைவுகள் இல்லாமல் மூலநோய் குணமாகும்.

ஒரு மண்டலம் சாப்பிடும் மருந்துகளும் உள்ளன, ஒரே வாரத்தில் குணமாகும் மருந்துகளும் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளன.

இதனால் உள் மூலம் குணமாகும், வெளிமூலம் சுருங்குகிறது. ஆசனவாயில் இருக்கும் சீழ்க்கட்டிகள் உடைந்து ஆற்றப்படுகின்றன. மல ஜலம் சுலபமான முறையில் வெளியேறுகிறது. மீண்டும் வருவதில்லை.

உதாரணத்திற்கு ஒரு மூலிகையைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

துத்திக் கீரை என்ற ஒன்றை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த துத்திக் கீரையை தினந்தோறும் சமையலில் சாப்பிட்டு வந்தால் மூலநோய் தலைக் காட்டாது. எத்தகைய மூலக்கட்டிகள் வந்தாலும் துத்தி இலைமீது விளக்கெண்ணெய் தடவி, அனலில் காட்டி மூலக்கட்டியின் மீது வைத்துக் கட்டிவிட, கட்டி உடைந்துவிடும். மூல முனைகள் உள்ளுக்குச் சென்றுவிடும். வேண்டுமானால் நீங்கள் கூட செய்து பார்க்கலாம்.

துத்திக்கீரயின் மற்ற பயன்கள்:


இதன் இலை, பூ, வேர், பட்டை என அனைத்துப் பகுதிகளும் மருத்துவக் குணம் கொண்டவை.

மூலநோய் கட்டி முளைபுழுப்புண் ணும்போகுஞ்

சாலவதக் கிக்கட்டத் தையலே - மேலுமதை

எப்படியேனும் புகிச்ச எப்பிணியும் சாந்தமுறும்

இப்படியிற் றுத்தி யிலையை

(அகத்தியர் குணபாடம்)

மலச்சிக்கல் தீர

மலச்சிக்கல் உடல் ஆரோக்கியத்திற்கு முதல் கேடாகும். மலச்சிக்கலை நீக்கினால் நோயின்றி நூறாண்டு வாழலாம். இன்றைய நவீன உணவுகள் எளிதில் ஜீரணமாவதில்லை, மேலும் அவசரமாக உணவை சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் உருவாகின்றது. மனச் சிக்கல் இருந்தால் கூடவே மலச்சிக்கல் வந்துவிடும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் தீரும்.

மூல வியாதி குணமாக

காரமும், புளிப்பும் உணவில் அதிகம் சேர்ப்பதால் சிலருக்கு குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமாகி மூலக் குடலை அடைக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்பட்டு மூலநோயாக மாறுகிறது.

இவ்வாறு மூல நோயால் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை நீர்விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து மூலநோய் படிப்படியாகக் குணமாகும்.

உடல் சூடு தணிய

துத்திக் கீரையை நன்கு நீரில் அலசி சிறியதாக நறுக்கி நீரில் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின் அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து இரசமாக அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.

வெப்பக்கட்டி குணமாக

துத்தியிலையை எடுத்து ஆமணக்கு (விளக்கெண்ணெய்) எண்ணெய் தடவி வதக்கி வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து கட்டி வந்தால் கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும்.

துத்தியிலையை சாறெடுத்து, பச்சரிசி மாவுடன் சேர்த்து களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் பூசி வந்தால் கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.

பல்ஈறு நோய் குணமாக

துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும்.


குடல் புண் ஆற

துத்திக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால் குடல் புண் ஆறும்.

சிறுநீர் பெருக்கி

சரியாக சிறுநீர் பிரியாமல் இருந்தால் சிறுநீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.

துத்திக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் ஆரோக்கியத்தோடு வாழலாம்.

வல்லாரை



வல்லாரை - Centella asiatica


வல்லாரைக்கு சரஸ்வதி, பிண்டீரி, யோகவல்லி, நயனவல்லி, குணசாலி, குளத்து குளத்தி, அசுர சாந்தினி போன்ற வேறு பெயர்களும் உண்டு. வல்லாரையில் அதன் இலைதான் மருத்துவ பயன் மிகுதியாக கொண்டது.

மருத்துவ பயன்கள்:

இது கற்பக மூலிகைகளில் ஒன்றாகும். வாய்ப்புண், அதிக இரத்தக் கழிச்சலால் உண்டாகும் ஆசனவாய்க் கடுப்பு, ஆசனவாய் எரிச்சல், யானைக்கால், நெறிகட்டுதல், மேகப்புண் ஆகிய நோய்களுக்கும் நல்லது.

வல்லாரை இலையை முறைப்படிக் பச்சையாய் உண்டால் அறிவு துலங்கும். வல்லாரைச் சாற்றில் உப்பும், சாதிபத்ரியும் சேர்த்துக் கொடுக்க பெருவயிறு, மகோதரம் முதலிய நோய்கள் நீங்கும். வல்லாரையை உணவில் துவையல் போன்று அடிக்கடி சேர்த்துவர உடலுக்கு வன்மையைத் தந்து நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கி எந்த நோயும் நம்மை அணுகாமல் செய்யும்.

வல்லாரை தோல் நோய்களுக்கு, குறிப்பாகத் தொழுநோய்க்கு நல்லது.தோல் நோய் தொந்தரவுகள் இருப்பவர்கள் தொடர்ந்து வல்லாரையை பயன்படுத்தி வந்தால் தோல்நோய் வெகு சீக்கிரத்தில் அகலும். நினைவாற்றலை பெருக்கும் ஆற்றல் வல்லாரைக்கு அதிகம் உண்டு .எனவே இந்த வல்லாரை இலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக நான்கைந்து இலைகளை பறித்து உண்ணலாம்.

வல்லாரை இலை கசப்பு சுவை கொண்டிருப்பதனால் இதனை பச்சையாக வெறும் வயிற்றில் சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். பச்சையாக தொடர்ந்து சாப்பிட முடியாதவர்கள் இந்த வல்லாரை இலையை பாடம் செய்து பொடியாக வைத்துக் கொண்டு பொடியினைக்கூட சாப்பிட்டு வெந்நீர் அருந்தலாம்.

மறதி நோயைக் கண்டித்து நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரை மாணவர்களுக்கு ஒரு அரிய மூலிகையாகும். மூளையைப் பலப்படுத்து வதில் மிகவும் சிறந்தது இது. இன்று மருந்து கடைகளில் வல்லாரை கேப் ஸூல் நிறைய விற்பதிலிருந்து இதன் அரிய சிறப்பை நீங்கள்உணரலாம்.

வல்லாரையை முதலாகக் கொண்டு வல்லாரை எண்ணெய், வல்லாரை நெய் முதலிய சித்த மருந்துகளும் செய்யப்படுகின்றன.

மாசிக்காய் - Gallnut

மாசிக்காய் - Gallnut

மாசிக்காயானது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஓர் அற்புத மான மருந்தாகும். இக்காய் மற்ற மரங்களின் காயைப் போல் பூவிலிருந்து காயாகாது. இந்த மரத்தின் கிளைகளில் ஒருவித பூச்சிகள் துளையிடும் போது கிளையிலிருந்து பால் வடிந்து அது உறைந்து திரண்டு கெட்டிப்படும். இதுவே மாசிக்காயாகும். பொதுவாக மாசிக் காய்களைச் சேகரிக்கும்போது அதிலுள்ள பூச்சிகள் வெளியே வருவதற்கு முன்பே சேகரிப்பதுதான் சிறந்த மருத்துவப்பயன் உடையதாக இருக்கும்.

மாசிக்காயைப் பொடி செய்து வெந்நீரில் போட்டு பத்து நிமிடம் சென்ற பின்னர் அந்நீரை வடிகட்டி வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும்.

மாசிக்காயை பொடி செய்து அதனை சிறிதளவு தினம் மூன்று வேளை உட்கொண்டுவர, பெண்களுக்கு மாத விடாயின்போது ஏற்படும். அதிக ரத்தப் போக்கினை கட்டுப்படுத்தும். மாசிக் காயைப் பொடித்து 50 கிராம் எடுத்து 800 மி.லி. நீருடன் கலந்து பத்து நிமிடம் நன்கு காய்ச்சி பின்னர் வடிகட்டி அதனை 30 மி.லி. முதல் 60 மி.லி. வீதம் அருந்தி வர, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலும், நாட்பட்ட இருமல், பெருங்கழிச்சல் முதலி யவைகளும் குணமாகும். பொதுவாக குழந்தைகளுக்கு உரைத்துக் கொடுக்கப்படும் உரை மருந்து வகைகளில் மாசிக்காயும் ஒன்றாகும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பச்சை பச்சையாக பேதியாகும். இதற்கு புது மண்சட்டியை வாங்கி வந்து கவிழ்த்துப் போட்டு அச்சட்டியின் மேல் மாசிக்காயை தாய்ப் பால் விட்டு இழைத்து குழந்தையின் நாவில் தடவி வர பேதி நிற்கும். மயில் துத்தம், பூநீறு உப்பு, சுண்ணாம்பு நீர், அபினி, நாபி, எட்டி முதலியவற்றை அளவுக்கு மீறி உட்கொண்டதால் உண்டான நஞ்சுக்கு சிறந்த முறிவாக மாசிக்காய் பயன்படுகிறது.

மாசிக்காயிலிருந்து ஒருவகை மஞ்சளும், வெண்மையும் கலந்த நிறம் உடைய தாய், துவர்ப்புச்சுவை கொண்டதுமான உப்பை எடுக்கிறார்கள். இது சிறந்த துவர்ப்பியாகவும், ரத்தப்போக்கை நிறுத்துவதற்கும் பயன்படுகிறது. நாள்பட்ட மேக நோய்களுக்கு மாசிக்காயை குடிநீரிட்டு 30 மி.லி. முதல் 60 மி.லி. வீதம் அருந்திவர பலன் கிடைக்கும். தொண்டைவலி, டான்ஸிலை ட்டிஸ் எனப்படும் தொண்டை அழற்சி நோய் உடையவர்கள் இதன் குடிநீருடன் 3 மில்லி கிராம் படிகாரமும், தேவையான அளவு தேனும் கலந்து வாய் கொப்பளித்து வர குணம் தெரியும். மாசிக்காயையோ, மாசிக்காய் மரப்பட்டையையோ நீரில் ஊற வைத்தால் ஊறல் குடிநீராகவும் அல்லது கஷாய மிட்டும் வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும். 30 முதல் 60 மி.லி. வரை அதையே உள்ளுக்கும் அருந்தி வரலாம். இதன் மரப்பட்டையை சாதாரண கழிச்சல், ரத்த வாந்தி, சிறுநீரில் ரத்தம் போகுதல், மாதவிலக்கின்போது அதிக ரத்தம் வெளியாதல், மேக நோய், ஈறு களிலிருந்து ரத்தம் வடிதல், சீதக்கழிச்சல் முதலியவைக ளுக்கும் கொடுக்கலாம்.

குழந்தை மருத்துவத்தில் மாசிக்காய் பல காலமாக மருந்தாக பயன்படுத்தப் பட்டு வருவதை நமது பாட்டிமார்களை கேட்டுப் பார்த்தால் கதை கதையாக சொல்வார்கள். சித்த மருத்துவத்திலும் மிக முக்கியமான பங்கினை பெறுவ தை அனுபவமிக்க சித்த மருத்துவர்களின் குறிப்புகளை படிக்கும் போது நன்கு உணரலாம். சித்த மருத்துவத்தில் மாசிக்காய் குடிநீர் ஒரு சிறந்த மருந்தாகும். மகளிர் மருத்துவத்தில் இந்த மாசிக்காய் மருந்து பெரும் நன் மையினை தரக்கூடியதை நமது முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்தனர். விஞ்ஞானம் முன்னேறாத அந்த காலக் கட்டத்தில் மாசிக்காய்தான் பெண்களுக்கு வரும் வெளியே சொல்லக்கூடாத நோய்களுக்கு மருந்தாக இருந்து வந்தது.

நிலக்கடலை

எண்ணெய் வித்துக்களில் மனிதர்களுக்கு அதிக அளவில் பயன்படுவது நிலக்கடலை ஆகும். நிலக்கடலையில் ஏகப்பட்ட அளவிற்கு புரோட்டீன் சத்து அடங்கியிருக்கிறது. நாம் உணவு தயாரிக்க பெருமளவில் பயன் படுத்தப்படும் கடலை எண்ணெய் கூட நிலக்கடலையிலிருந்துதான் எடுக்கப்படுகின்றன. கடலை எண்ணெய் பயன்படுத்தினால் அளவிற்கு அதிகமான அளவில் கொலஸ்ட்ரால் உண்டாகின்றது என்பதால் தற்காலத்தில் கடலை எண்ணெ யை பலர் தவிர்க்கின்றனர்.

உடம்பு மெலிதாக இருப்பவர்கள் தினம் சிறிது அளவு நிலக்கடலை பருப்பை சாப்பிடலாம். நிலக்கடலை சாப்பிடும்போது நிறைய உலர்ந்த முற் றிய கடலையை சாப்பிடுதல் கூடாது. ஏனெனில் எண்ணெய் சத்து முதிர்ந்த கடலையில் அதிகம் இருப்பதால் அது வாந்தியையும் உண்டு பண்ணிவிடக் கூடும். நிலக்கடலையிலிருந்து பால் எடுத்து பயன்படுத்தலாம்.

கெட்டுப் போகாத, சோடையில்லாத நல்ல நிலக்கடலை பருப்பில் நூறு கிராம் எடுத்து ஒரு சல்லடை தட்டில் பரப்பவும். அதன்மீது சுத்தம் செய்யப்பட்ட மணலைப் பரப்பி தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் தட்டில் நிற்காமலும், மண் காயாமலும் ஒரு நாள் முழுவதும் காற்று வெளிச்சம் படும் இடத்தில் வைத்தால் நிலக்கடலை முளைத்து விடும். பொதுவாக முளைத்த தானியங்கள், பயிறுகள், முளைக்காதவைகளை விட ஏழு மடங்கு சத்துக்கள் உடையவை. ஒரு சில சத்துக்கள் மட்டும் 23 மடங்கிற்கு மேல் உயருகின்றன. காற்றிலிருந்தும், தண்ணீரிலிருந்தும் மண்ணின் உதவியுடன் இந்த சத்துக்கள் முளைவிட்ட பயறுகளுக்கு வந்து சேருகின்றன.

நூறு கிராம் எடையுள்ள பருப்பு தண்ணீரிலும், மணலிலும் நனைந்தவுடன் முந்நூறு கிராம் அளவிற்கு எடை அதிகரித்து விடும். இதிலிருந்து பால் எடுத்து உணவுக்காகப் பயன்படுத்தலாம். நிலக்கடலை சாப்பிட்டவுடன் சிறிது அச்சு வெல்லமோ, சர்க்கரையோ சாப்பிட வேண்டும் என்று சிலர் சொல் வதுண்டு. ஏனெனில்- சிலருக்கு நிலக்கடலை சாப்பிட்டவுடன் தொண்டை கரகரப்பு ஏற்படலாம். அதற்குத்தான் நிலக்கடலையை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதனால் நமது உடம்பிற்கு நிறைய பலன் கிடைக்கும்.

அகத்திக் கீரை

செடி இனத்தைச் சேர்ந்த அகத்தி, தோட்டங்களில் குறிப்பாக நீர் தேங்கிய நிலங்களிலும், வெற்றிலைக் கொடிக் கால்களிலும் விளையும். அகத்தியில் சாழை அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி என்ற சில வகைகள் உண்டு.


பொதுவாக அகத்தி வெள்ளை நிறத்தில் பூக்கும். சிவப்பு நிறத்தில் பூக்கும் அகத்தி சிவப்பகத்தி என்று அழைக்கப்படுகிறது.

சிறிது உப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட இக்கீரையை வேறு மருந்துகள் உண்ணும் காலங்களில் உண்ணக் கூடாது. ஏனெனில் மருந்துகளின் வீரியத்தை அகத்திக் கீரை குறைக்கவும் அழித்துவிடம் செய்யும்.

இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தம் கெட்டுப் போகும் வாய்ப்புண்டு. சொறி, சிரங்கும் தோன்றலாம். இரத்தம் குறைந்து இரத்த சோகை ஏற்படலாம். வயிற்று வலியும் பேதியும் உண்டாகலாம்.

காய்ச்சல் நேரத்தில் இக்கீரையைப் பிழிந்து அதன் சாற்றில் இரு துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பிக்க கடுமையான தலைவலி நீங்கும்.


சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ நிறைய உள்ளது. போதுமான பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும்.

இக்கீரை சமைக்கும்போது நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. மலச்சிக்கல் நீங்கும்.

குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை ஐந்துக்கு ஒரு பங்கு தேன் கலந்துதலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும்.

இது வாயுவை உண்டாக்கும் இயல்புடையது. எனவே வாய்வுக் கோளாறு உள்ளவர்கள் இக்கீரையை உண்ணக் கூடாது.

சீத்தாப்பழம்

சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. ஆங்கிலத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும். இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa என்று பெயர்.

சீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.

மருத்துவ பயன்கள்:

1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.

2. சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.

3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.

4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்;து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.

5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.

6. சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.

8.சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.

9.சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.

10 சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.